ஓசூர் அருகே புளியந்தோப்பில் யானைகள் முகாம்

ஓசூர், அக்.12: ஓசூர் அருகே புளியந்தோப்பில் யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போடூர்  வனப்பகுதியில் கடந்த 5 நாட்களாக 15 காட்டுயானைள் முகாமிட்டுள்ளன. பகலில் பொழுதில் வனப்பகுதியில் ஓய்வெடுக்கும் இந்த யானைகள், இரவானதும் ஊருக்குள் புகுந்து, விளை நிலங்களை சேதப்படுத்தி  வருகின்றன. கடந்த 2 நாட்களாக ஆலியாளம் கிராமத்தையொட்டியுள்ள தோட்டத்திற்குள் புகுந்து நெற்பயிரை தின்றும்,மிதித்தும் சேதப்படுத்தின. தற்போது, ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் நெல், அவரை, துவரை, வெண்டை, சோளம், கத்தரி, தக்காளி,பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

மேலும், நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 15 யானைகளும் தற்போது இரண்டு பிரிவுகாளாக பிரிந்துள்ளன. இந்த யானைகள் பகல் வேளையிலேயே ஊரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உலா வருவதை கண்டு கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று மதியம் இந்த யானைகள் சானமாவு வனப்பகுதி அருகே தனியார் புளியந்தோப்புக்குள் முகாமிட்டிருப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்று யானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பயிர்கள் அனைத்தும் செழித்து காணப்படுகின்றன. அதனை சுவைப்பதற்காக இப்பகுதியில் யானை கூட்டம் முகாமிட்டிருக்கின்றன. இந்த யானைகளால் தினசரி பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானை கூட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி விட்டால் யானைகளின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும். இரவு நேரத்தில் தோட்டங்களுக்குள் நுழையும் யானைகள், கடும் பனி மூட்டம் காரணமாக நேரம் செல்வதே தெரியாமல் அங்கேயே முகாமிட்டிருக்கும். பனி மூட்டத்திற்குள் மறைந்திருக்கும் யானைகள் தெரிய வாய்ப்பில்லாத நிலையில் பயிர் சேததத்துடன், உயிர் சேதம் அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே, யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: