பிறந்த 2 நாட்களில் கால்வாயில் வீசிய பச்சிளம் குழந்தை மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

பூந்தமல்லி, அக். 12: போரூர் அருகே மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்னை மாநகராட்சி மின்சார சுடுகாடு உள்ளது. இதன் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வளசரவாக்கம் போலீஸ்காரர் ரத்னகுமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணியில் சுற்றப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

 

உடனடியாக அந்த குழந்தையை மீட்டு போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் மின்சார சுடுகாடு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இரு ஆண் மற்றும் பெண் கையில் ஒரு பையை கொண்டு வந்து வைத்து செல்வது பதிவாகி இருந்தது. அதை வைத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் இந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசி சென்றார்களா? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related Stories: