ஆலங்குடி அருகே கீழப்பட்டி அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தில் விரிசல்

ஆலங்குடி, அக்.11:  ஆலங்குடி அருகே கீழப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1961ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இயங்கி வந்தது. பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த துவக்கப்பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது நான்கு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த 2011-2012ம் ஆண்டு ரூ.89 ஆயிரம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது பள்ளி கட்டிடத்தில் ஜன்னல்களுக்கு தாழ்பாள்கள் இல்லாமலும், ஜன்னல்கள் உடைந்த நிலையிலும் உள்ளது.

மேலும் பள்ளி கட்டிட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் மேற்கூரைகள் பெயர்ந்து உள்ளன. தற்போது பெய்துவரும் மழையால் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து ஒழுகுவதால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த கட்டிடம் என்பதால், எந்த நேரத்திலும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும்முன் பழுதடைந்த கீழப்பட்டி அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதடைந்த நிலையில் பலவீனமாக உள்ளது. மேலும், மேற்கூரையில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளன. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடத்தின் மேற்கூரை விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இதனால் எங்கள் குழந்தைகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு தரமான முறையில் கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: