தொடர் மழை எதிரொலி அமராவதி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தம்

உடுமலை,அக்.7: தொடர் மழை காரணமாக அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணயைில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 54 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் முறை வைத்து பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆற்றின் வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான வாய்க்கால் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  அமராவதி பாசனம் பெறும் விவசாயிகள் நெல்,வாழை, கரும்பு மற்றும் தென்னை பயிரிட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 20ம் தேதி அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 88 அடியாக இருந்தது(மொத்த கொள்ளளவு 90அடி). 20ம் தேதி முதற்கட்டமாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து படிப்படியாக 1700 கனஅடி வரைக்கும் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 79 அடியை தொட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அமராவதி பாசனபகுதி மற்றும் அணையின் நீராதார பகுதிகளில் தொடர் மழை நீடித்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. பாசன பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறையினர் படிப்படியாக குறைத்தனர். கடந்த 1ம் தேதி அணையின் நீர்மட்டம் 77.27 அடியாக இருந்த நிலையில் ஆற்றில் 650 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 2ம் தேதி 159 கனஅடியும்,3ம் தேதி 129 கனஅடியும்,4ம் தேதி 55 கனஅடியும், 5ம் தேதி 5 கனஅடியும் நேற்று (6ம் தேதி) 5 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: