சிவகாசியில் 30 ஆண்டாக தூர்வாரப்படாத கழிவுநீர் ஓடை

சிவகாசி, செப். 6: சிவகாசியில் 30 ஆண்டாக தூர்வாரப்படாத கழிவுநீர் ஓடையால், அலுவலகத்தில் பணிபுரிவோரும், பள்ளி மாணவ, மாணவியரும் பொதுமக்களும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத்தொழில் நடந்து வருகிறது. இந்த நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான உட்கட்டமைப்பு வசதியில்லை. நகரில் பெரும்பாலான வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் கிருதுமால் ஓடைவழியாகச் சென்று மீனம்பட்டி கண்மாயில் கலக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் முக்கிய கழிவுநீர் ஓடையான கிருதுமால் ஓடை தூரவாரப்படவில்லை. இதனால், மழை காலங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிருதுமால் ஓடையில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டியுள்ளனர். இவைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.

நகரில் உள்ள டெலிபோன் எக்சேஞ்ச் எதிரே, கிருதுமால் ஓடையே தெரியாத அளவுக்கு கோரைப் புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், கந்தபுரம் தெரு, முஸ்லீம் நடுத்தெரு, சீதக்காதி தெரு, அண்ணா காலனி ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்ள், இறைச்சிக் கடைகாரர்கள் கழிவுகளை கிருதுமால் ஓடையில் கொட்டுகின்றனர். இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

இதன் அருகே உள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பகல் நேரங்களில் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில்  கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து பள்ளி வளாகத்தில்  தேங்குகிறது இதனால், மாணவர்களுக்கு  நோய் பரவும் அபாயம் உள்ளது. பெரிய மழை பெய்தால் சிவகாசி டெலிபோன் எக்சேஞ்ச் எதிரே குளம்போல் மழைநீர் தேங்குகிறது. இது போன்ற சமயங்களில் பள்ளி குழந்தைகள் அந்த வழியாக செல்லும்போது, அவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

சிவகாசி மருதுபாண்டியர் தெருவிலிருந்து பழைய பஸ்நிலையம் வரை உள்ள கிருதுமால் ஓடையில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இங்கு வீடுகளில் உள்ள கழிவறை குழாய்களை நேரிடையாக கிருதுமால்  ஓடையில் இணைத்துள்ளனர். இதனால், சுகாதார கேடு உண்டாகிறது. எனவே,  சிவகாசியில் கிருதுமால் ஓடையை போர்க்கால அடிப்படையி–்ல் தூர்வார  நகராட்சி ஆணையாளர்  நடவடிக்கை எடுக்க  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: