இந்தி என்ன தேசிய மொழியா? ஒன்றிய அரசுக்கு கமல் கேள்வி

சென்னை: இந்தி தேசிய மொழி கிடையாது. இதுபற்றி ஒன்றிய அரசு விளக்க வேண்டும் என கமல்ஹாசன் கோரியுள்ளார். பெருங்களத்தூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தார். இதில் அவருக்கு பணம் பாக்கி தர வேண்டியது இருந்தது. இதுபற்றி அந்த வாடிக்கையாளர் செல்போனில் கேட்டபோது, எதிர்முனையில் சொமோட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் பேசியுள்ளனர். வாடிக்கையாளருக்கு இந்தி தெரியவில்லை. அப்போது, ‘இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு பணம் கிடைக்காது’ என தெரிவிக்கப்பட்டது. அந்த வாடிக்கையாளர் இந்த தகவலை டிவிட்டரில் பதிவிட, இது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் நேற்று கூறியிருப்பதாவது: இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: