வால்பாறையில் கனமழை மரங்கள் முறிந்து விழுந்ததில் 5 வீடுகளின் கூரைகள் சேதம்: கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வால்பாறை: வால்பாறை பகுதியில் கடந்த 3 தினங்களாக கன மழை நீடித்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் பெய்து வரும் மழையால் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில், ஆழியார் வரை மரக்கிளைகள் சாலையில் முறிந்து விழுந்து கிடக்கிறது. கடும் மழை மற்றும் சூறைக்காற்றால் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தேயிலைச் செடிகளுக்கிடையே வைக்கப்பட்டுள்ள மரங்கள் முறிந்து விழுந்தன.  வால்பாறை பகுதியில் நீடித்த சூறைக்காற்று மற்றும் மழையால் பல்வேறு எஸ்டேட்களில் தோட்டத்தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.  வால்பாறை டவுனில் புதுமார்கெட் பகுதியில் மரம் விழுந்து ஒரு வீடு சேதம் அடைந்தது.

அண்ணா நகர் மாரியம்மன் கோவில் அருகில் தடுப்பு சுவர் மழைக்கு இடிந்தது. காமராஜ் நகர் பகுதியில் சூறைக்காற்றில் டீகடையின் சிமென்ட் சூறாவளிக் காற்றில் அடித்து செல்லப்பட்டது. வால்பாறையை அடுத்து உள்ள வறட்டுப்பாறை எஸ்டேட்டில் பிற்பகல் பலத்த காற்றின் காரணமாக ராட்சத மரம் வேரோடு சாய்ந்து தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மீது விழுந்ததில் 5 வீடுகள் சேதம் அடைந்தது. கூரைகள் மற்றும் வீட்டு பொருட்கள் உடைந்து உள்ளது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அபாய மரங்களை வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கன மழையால் ஆறுகளில் நீர் வரத்து  அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றுப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆற்றங்கரையில் உள்ள தேயிலைச்செடிகள் ஆற்று நீரில் மூழ்கி உள்ளது. தொடர் மழை காரணமாக வால்பாறை எஸ்டேட் மற்றும் டவுன் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது மேலும் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  காலை 9 மணி நிலவரப்படி சோலையார் அணையில் ஒரே நாளில் 11 அடி நீர் மட்டம் உயர்ந்து 130 அடியை எட்டியுள்ளது. மேலும் ஆழியார், பரம்பிக்குளம் உள்ளிட்ட பி.ஏ.பி திட்ட அணைகள் நிரம்பி வருகிறது.

மழையளவு - வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 150மி்மீ. மழை பதிவாகி உள்ளது. சோலையார் அணை 130 மிமீ., கீழ் நீராறு 100 மிமீ.,  வால்பாறை 88 மிமீ., பதிவாகி உள்ளது.

Related Stories: