மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆக. 8ல் கண்டன ஆர்ப்பாட்டம்: தொமுச பேரவை வேண்டுகோள்

சென்னை: தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் அவசர ஊரடங்கு காரணமாக  சிறு, குறு நடுத்தர தொழில்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் ஊதியம் இன்றியும், பல தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்க இயலாத நிலையில் உள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் நிராதரவாக விடப்பட்டு எந்தவித உதவியுமின்றி தவித்து வருகின்றார்கள். எனவே மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேச விரோதப் போக்குகளை கண்டித்து இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினமான ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துவதென மத்திய தொழிற்சங்கங்களால் முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நிலவும் கொரோனா நோய் தொற்று சம்மந்தமாக ஊரடங்கு தொடர்வதாலும் ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 8 அன்று தொமுச பேரவையில் இணைந்துள்ள சங்கங்கள் தங்கள் சங்க இயக்கப் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தொகுத்து இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்புவது என்கிற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான படிவங்கள் சங்கங்களுக்கு அனுப்பப்படுகிறது. தொழிலாளர்கள் அவர்தம் குடும்பத்தினர் என கையொப்பம் பெற்று படிவங்களை தொமுச பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக இணக்கமான தொழிற்சங்கங்களோடு பேசி கைகளில் கொடி, கோரிக்கை பதாகைகளை ஏந்தி நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: