ஒளியை உமிழும் மின்மினிப் பூச்சிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியிலிருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும். கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் மின்னிக்கொண்டே செல்லும் பூச்சிகளை நம்மில் பலர் பார்த்திருப்போம். மின்மினிப் பூச்சி அல்லது கண்ணாம் பூச்சி (Firefly) என்பது வண்டு வகையைச் சார்ந்த ஒரு பூச்சியாகும். உலகம் முழுதும் இவற்றில் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையிலிருந்து புழு வந்துவிடும்.

புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே உணவாக உட்கொள்கின்றன. மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத்துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன. இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப்படுகின்றன. இந்த செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. இந்த செல்களுடன் சுவாசக்குழல்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதனுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஒளியைத் தருகிறது. இந்த வேதிவினைக்கு ஆற்றலும் தேவைப்படுகிறது. இந்தப் பூச்சிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.

Related Stories: