காங்கிரஸ் கட்சியின் 5வது பட்டியல் வெளியீடு பிரணாப் முகர்ஜி மகனுக்கு மேற்குவங்கத்தில் சீட்

ஆந்திர மாநிலத்தில் போட்டியிடும் 22 பேர் உட்பட 56 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வௌியிட்டுள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல்களை காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. இதன்படி 5வது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.  ஆந்திராவில் போட்டியிடும் 22 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலங்கானாவில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள், ஒடிசா 6, அசாம் 5, மற்றும் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜிக்கு ஜான்கிபூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. பெர்காம்பூர் தொகுதியில் அதிர் ரஞ்சன் சவுத்ரியும், ராய்கன்ஜ் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பிரியா ரஞ்சன் தாஸ்முனீஸ் மனைவி தீபா தாஸ்முன்சியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தனித்தொகுதிகளான ஆந்திராவின் காக்கிநாடாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ, பாபட்லாவில் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ேஜ.டி.சீலமும் போட்டியிடுகின்றனர். அசாமின் மன்கால்டோய் தொகுதியில் புவனேஸ்வர் கலிதா, ஒடிசாவின் காலாஹன்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் பாக்த் சரன் தாஸ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சி அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி  நள்கோண்டா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் 137 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி இதுவரை வெளியிட்டுள்ளது. மேலும் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 36 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: