காங். ஆட்சியில் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது : வாரணாசியில் பிரதமர் மோடி தாக்கு

வாரணாசி: ஒரு ரூபாயில் 85 சதவீதம் எங்கு போகிறதென்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பேசியதை மறைமுகமாக மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தற்போது தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ‘புதிய இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:இந்தியாவின் விளம்பர தூதர்களாகவே வெளிநாடு வாழ் இந்தியர்களை கருதுகிறேன். அவர்களே நமது தகுதி, திறமையின் அடையாளங்கள். மொரீசியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியினர் தலைமைப் பதவிகளை வகித்து வருகிறார்கள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், மக்களின் வரிப்பணம் வீணாவதையும், கொள்ளை அடிக்கப்படுவதையும் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதற்கான தைரியமும் அவர்களிடம் இல்லை. நாங்கள் அந்த சூழலுக்கு தீர்வு கண்டுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் 85 சதவீதம் கொள்ளை அடிக்கப்பட்டதை (1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைவதாகவும், 85 பைசா எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கூறியதை மறைமுகமாக மோடி மேற்கோள் காட்டினார்) தடுத்து, தொழில்நுட்ப உதவியுடன் 100 சதவீதமும் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

பாஜ அரசு, பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடியை செலுத்தியிருக்கிறது. இதே முந்தைய நடைமுறையை பின்பற்றியிருந்தால், ரூ.4.5 லட்சம் கோடி வீணாகி இருக்கும். இதன் மூலம் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமான ஜனவரி 9ம் தேதி இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அலகாபாத்தில் கும்பமேளா மற்றும் குடியரசு தின விழாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க ஏதுவாக, மாநாடு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடமை உணர்வு உரிமையாகி விட்டது

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அமைச்சர் மன்சுக் மந்தாவியா தலைமையில் 150 கிமீ நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. நடை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி குஜராத் மாநிலம், பாவ்நகரில் நேற்று நடந்தது. இதில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மகாத்மா காந்தி எப்போதும் கடமையை வலியுறுத்தினார். சுதந்திரத்திற்கு பிறகு அந்த கடமை உணர்வு, உரிமை உணர்வாக மாறிவிட்டது. இன்று நம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், வளர்ச்சி அடைய வைக்கவும் இந்த இரண்டு உணர்வுகளுமே வேண்டும். மக்கள் இயக்கத்தை உருவாக்கி சுதந்திரத்தை பெற்று தந்தவர் காந்தி. அவரது வழியில், மக்களின் பங்களிப்பால்தான் தூய்மை இந்தியா திட்டம் வெற்றி அடைந்திருக்கிறது. அரசு மட்டும் தனியாக இதை செய்திருக்க முடியாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: