மன்னாரில் எலும்புக்கூடு புதையல்...இலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,: இலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை வடக்கு மாநிலத்தின் மன்னார் நகரில் கூட்டுறவு சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளம் தோண்டிய போது பூமிக்கு அடியில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ வல்லுனர்கள், தடயவியல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இதுவரை 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 125 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

சந்தர்ப்ப சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது எலும்புக்கூடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்ப தோன்றுகிறது.2009ல் நடந்த ஈழப்போரில் விடுதலைப்புலிகள் போரை நிறுத்திய நிலையில், ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்தன. போர் முனையிலிருந்து அகற்றப்பட்ட தமிழர்களின் உடல்களில் ஒரு பகுதி மன்னார் நகரில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.இலங்கை போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதே உலக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நீதிமன்ற விசாரணையை இலங்கை அரசு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், மன்னாரில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு இனப்படுகொலை நடந்ததை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை ஆவணப்படுத்த, சர்வதேச அளவில் நடுநிலையான, சுதந்திரமான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: