புதிய சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய ஜன. 24-ல் பிரதமர் தலைமையில் உயர்மட்ட தேர்வு குழு கூட்டம்

டெல்லி : சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் மீது பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால், இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபரில் கட்டாய விடுப்பில் அனுப்பியது. பின்னர் இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா கடந்த 9ம் தேதி மீண்டும் பொறுப்பேற்றார்.

‘மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (சிவிசி) அறிக்கை தாக்கல் செய்யும் வரை அவர் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது, அலோக் வர்மாவுக்கு எதிராக நியமன குழுதான் நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது. இதனையடுத்து சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர்,சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. அவரை தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய சிபிஐ இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, ஜனவரி 24-ம் தேதி டெல்லியில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: