ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் பாகிஸ்தான் 282 ரன்னில் சுருண்டது: 6 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார் லயன்

அபுதாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பகார் ஸமான், முகமது ஹபீஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹபீஸ் 4 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஸ்மான் - அசார் அலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. அசார் அலி 15 ரன் எடுத்து நாதன் லயன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹரிஸ் சோகைல், ஆசாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோர் லயன் பந்துவீச்சில் (20வது மற்றும் 22வது ஓவர்) அடுத்தடுத்து டக் அவுட்டாகி அணிவகுத்தனர். பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன் என்ற கவுரவமான நிலையில் இருந்து, 21.4 ஓவரில் 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. லயன் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தாவிட்டாலும் 6 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில், பகார் ஸமான் - கேப்டன் சர்பராஸ் அகமது ஜோடி 6வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 147 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். சதத்தை நெருங்கிய நிலையில், பகார் ஸமான் 94 ரன் எடுத்து (198 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) லாபஸ்சேன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். பிலால் ஆசிப் 12 ரன், சர்பராஸ் அகமது 94 ரன் (129 பந்து, 7 பவுண்டரி) எடுத்து லாபஸ்சேன் பந்துவீச்சில் பலியாகினர். அடுத்து வந்த யாசிர் ஷா 28, முகமது அப்பாஸ் 10 ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81 ஓவர்). ஆஸி. பந்துவீச்சில் லயன் 4, லாபஸ்சேன் 3, ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்துள்ளது. கவாஜா 3 ரன், சிடில் 4 ரன் எடுத்து அப்பாஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: