ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்

அம்பை: வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் தைப்பெருந்திருவிழாவின் 11வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான அன்புக்கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில்  மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் தைப்பெருந்திருவிழா மற்றும் மாசி மகா ஊர்வலம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை மாத தேரோட்ட திருவிழா பிப். 1ம் தேதி  காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு தண்டிகை வாகனத்தில் அய்யா ஸ்ரீமன் ஆதிநாராயண வைகுண்டர் பவனிவரும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகளும் வாகன பவனியும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மமும் நடந்தது. 2ம் திருநாள் அன்று சுவாமி கருட வாகனத்திலும் 3ம் நாள் (ஞாயிறு) சிங்க வாகனத்திலும் 4ம் நாள் அன்ன வாகனத்திலும் 5ம் நாள் சூரிய வாகனத்திலும் 6ம் நாள் நாக வாகனத்திலும் 7ம் நாள் பூப்பல்லக்கிலும் 8ம் நாள் குதிரை வாகனத்திலும் 9ம் நாள் அனுமன் வாகனத்திலும் 10ம் நாள் அன்று காலை 11 மணிக்கு  அங்கபிரதட்சனம், பால்குடம், சந்தன குடம் ஊர்வலம் நடந்தது.

இரவு 2 மணிக்கு அய்யா ஸ்ரீமன் ஆதிநாராயண வைகுண்டர் இந்திர வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.11ம் திருநாளான நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து  இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அதிகாலை 2 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. விழாவில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை சிங்காரி மேளமும் சிறுமிகளின் கோலாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்புகொடி மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: