மெட்ரோ ரயில் பணிக்காக வீடுகளை இடிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : மாதவரத்தில் பரபரப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை மாதவரத்தில் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பாதையமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மாதவரத்தில் இருந்து சிப்காட் வரையிலும் கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையில் என 107.76 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையும், 116 ரயில் நிலையங்களும் அமைகிறது. இதற்காக மாதவரத்தில் தனியார் நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டு அசிசி நகர், தபால்பெட்டி போன்ற இடங்களில் 200 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் மெட்ரோ ரயில்பாதை அமைய உள்ள இடத்தின் தன்மையை அறிய, பால் பண்ணையில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தில் ஏராளமான வீடுகளும் நூற்றுக்கணக்கான மரங்களும் அகற்றப்பட உள்ளன. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்புகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக்கோரி குடியிருப்ேபார் நலச் சங்கங்களின் சார்பில், நேற்று காலை மாதவரம் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளும் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் மாதவரம் போலீசார் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: