மயிலாடுதுறை, ஏப்.11: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றவுள்ள காவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தலைமையில், தேர்தல் பார்வையாளர் (காவல்துறை) ஜன்மே ஜெயா பி கயிலாஷ், மாவட்ட எஸ்பி மீனா முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 1743 வாக்குச்சாவடிகளில் 89 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்றைய தினம் தேர்தல் பார்வையாளர், காவல்துறை அவர்கள் முன்னிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி வழியாக தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள காவலர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, 30 உதவி காவல் ஆய்வாளர்களும், 67 காவலர்களும், 67 தலைமை காவலர்களும், 325 காவல் படையினரும் வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதில் டிஆர்ஓ மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
The post வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரி வேண்டுகோள்; தேர்தலில் பணியாற்ற உள்ளவர்களுக்கு மென்பொருள் செயலி வாயிலாக காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு appeared first on Dinakaran.