வரலாற்று கறை

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர், அந்நாடு, தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அடுத்து, அதிபர் அஷ்ரப் கனி தப்பி ஓடிவிட்டார். ஆப்கானிஸ்தானில் கடந்த காலத்தில், அதாவது 1990-ம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி இல்லை. அதுபோன்று இம்முறையும் பெண்கள், சிறுமிகள் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிடும் என்கிற அச்சம் அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கொடூரமான தலிபான்கள் ஆட்சியில் வாழ்வதைவிட, வேறு எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளலாம் என அஞ்சி அந்நாட்டு மக்கள், கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.ஆனால், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், இம்முறை உலகிற்கு தங்களை நவீன சிந்தனையுள்ளவர்களாக காட்டிக்கொண்டுள்ளனர். இதுபற்றி தலிபான் அமைப்பின் நீண்டகால செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் கூறுகையில், ‘‘கடந்த காலத்தைவிட, இம்முறை தலிபான்களுக்கு ஏராளமான அனுபவங்கள் கிடைத்துள்ளன. அந்த அனுபவத்தால் எங்களது கண்ணோட்டம் மாறும். இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். பெண்கள், சுகாதாரத்துறையில் பணியாற்றலாம், கல்வி கற்கலாம், பெண்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் காட்டமாட்டோம்’’ என அறிவித்துள்ளார். தலிபான்களின் அறிவிப்பு இவ்வாறு இருக்க, அவர்களது நடவடிக்கை வேறு மாதிரியாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் நகரில் அமைந்துள்ள ஹசாரா சமூக தலைவர் அப்துல்அலி மஸாரியின் சிலையை, தலிபான்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் வந்துள்ளதால், ஹசாராக்கள் மீதான அடக்குமுறையை தலிபான்கள் துவக்கிவிட்டனர். கடந்த முறை ஆப்கனை கைப்பற்றியபோது, பாமியானில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்து, வரலாற்று சுவடுகளை தலிபான்கள் அழித்தனர். இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஹசாரா இனத்தின் தலைவர் சிலையை தகர்த்து வீசியுள்ளனர்.  இன்றைய விஞ்ஞான உலகில், பல்வேறு நாடுகளில் முஸ்லிம் பெண்கள், உயர்பதவிக்கு முன்னேறியுள்ளனர். குறிப்பாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டில் பெண் ஒருவர் பிரதமராகவே வந்துவிட்டார். முழு கட்டுப்பாடு  அமலில் உள்ள தேசமான சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுகின்றனர், சுதந்திரமாக வாழ்கின்றனர். ஆனால், ஆப்கானில் மட்டும் அடிமைத்தனம் மீண்டும் தலைதூக்குவது சர்வதேச அரங்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, பெண்கள் முன்னேற்றத்துக்கும், தேச வளர்ச்சிக்கும் உதவாது. பெண்களுக்குரிய உரிமையை வழங்காவிட்டால், தலிபான்கள் மீதான வரலாற்று கறை ஒருபோதும் நீங்காது….

The post வரலாற்று கறை appeared first on Dinakaran.

Related Stories: