வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி: எழும்பூர் மகப்பேறு நல மருத்துவர்கள் அகற்றினர்

சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனவந்தி (45). கூலித்தொழிலாளி இவர் கடந்த ஒரு வருடமாக கடுமையான வயிற்று வலியாலும், பசியின்மையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை, எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனார். இதையடுத்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா வழிகாட்டுதலின் படி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவிதா தலைமையில், டாக்டர்கள் ஆனந்தி, சுஜாதா குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதில் அவருடைய வயிற்றில் இருந்து 22 கிலோ எடை கொண்ட புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவர் உடல் நலத்துடன் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விஜயா கூறியதாவது: தனவந்தி வயிற்றி இருந்து அகற்றப்பட்ட 22 கிலோ எடையுள்ள கட்டி புற்றுநோய் கட்டி என்பதால் அவரை 6 மாத காலம் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்து நரம்பு வழியாக அவருக்கு மருந்து ஏற்ற வேண்டும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது 65 கிலோ எடையுடன் இருந்தார். தற்போது அவர் 43 கிலோ எடையாக குறைந்துள்ளார். மேலும் நோயாளிக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக இருக்கிறார். அவர் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார் முழுவதும் குணமடைந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்….

The post வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி: எழும்பூர் மகப்பேறு நல மருத்துவர்கள் அகற்றினர் appeared first on Dinakaran.

Related Stories: