வம்பன் வீரமாகாளியம்மன் கோயிலில் மது எடுப்பு ஊர்வலம்

ஆலங்குடி, ஏப்.13: ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று வந்தது. ஒன்பதாம் நாள் திருவிழாவான மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

இதில் வம்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள 6 கிராமத்து பெண்கள் நல்ல மழை பொழிவு வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும், ஏழு நாட்கள் விரதம் இருந்து புதிதாக முளைவிட்ட தென்னம்பாளையை வெட்டி நெல் நிரப்பிய குடத்தின் மீது தென்னம்பாளையை வைத்து, அந்த குடத்தை மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக பெண்கள் சுமந்து வந்து கோவில் வளாகத்தில் கொட்டி அம்மனிடம் வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த மது எடுப்பு ஊர்வலத்தின் போது பால்குடம் எடுத்தும், கரும்பு தொட்டில் சுமந்தும் மற்றும் பாரம்பரிய முறைப்படி பெண்கள் கும்மியடித்தும் குலவையிட்டும் உற்சாகமாக அம்மனை தரிசித்தனர்.

The post வம்பன் வீரமாகாளியம்மன் கோயிலில் மது எடுப்பு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: