வடவாற்றில் குளிக்க சென்ற கொத்தனார் தண்ணீரில் மூழ்கி பலி

 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் சந்தைதோப்பு பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்(34), கொத்தனார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் அதேபகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தற்போது திருச்செந்தூர் முருகன் கோயில் செல்வதற்கு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் நேற்று காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றுக்கு சென்று, ஆற்றில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் தினேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, பதில் ஏதும் இல்லை. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர் குளிக்க சென்ற வடவாறு பகுதிக்கு சென்று தேடி பார்த்துள்ளனர்.

அப்போது அவரது துணிமணிகள் மற்றும் பைக் அப்பகுதியில் இருந்துள்ளது. இதையடுத்து வடவாற்றில் இறங்கி தேடியுள்ளனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு இறந்த நிலையில் தினேஷ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து அவரது மனைவி பிரியதர்ஷினி காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வடவாற்றில் குளிக்க சென்ற கொத்தனார் தண்ணீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: