ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி கொள்ளை: கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

ஈரோடுகோபி, ஏப்.11: கோபியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 12 மணி நேரத்தில் அடையாளம் கணப்பட்டதில் இருவர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட நகை, பணத்தை கோபி போலீஸ் நிலையத்தில் எஸ்பி சசிமோகன் பார்வையிட்டார். தனிப்படையில் இடம் பெற்ற இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். அதைத்தொடர்ந்து எஸ்பி சசிமோகன் கூறியதாவது: கோபியை சேர்ந்த சுதர்சன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.2.80 கோடி கொள்ளை போனதாக புகார் வந்தது. அதைத்தொடர்ந்து டிஎஸ்பிக்கள் ஆறுமுகம் (ஈரோடு டவுன்), சியாமளா தேவி (கோபி) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை குறித்து விசாரணை நடைபெற்றது. பல கட்ட விசாரணையில் இரண்டு தடயங்கள் கிடைத்தது. கொள்ளை நடந்தபோது கிடைத்த ரத்த துளிகள் ஆய்வு செய்யப்பட்டது. செல்போன் சிக்னல், சிசிடிவி பதிவுகள், அதில் கிடைத்த கைரேகை போன்றவற்றை வைத்து கொள்ளையர் யார்? என்பது தெரியவந்தது.

அதில் சுதர்சனின் நண்பர் ஸ்ரீதரன், அவரது உறவினர் பிரவீனை கைது செய்து அவர்களிடம் இருந்த 2.80 கோடி ரூபாயும், நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் பெரிய குற்றச்சம்பவமான கொள்ளை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் யார் எனபது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட முழு தொகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி காமிரா பழுதடைந்த நிலையில் அருகில் உள்ள காமிராவை வைத்தே கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடிந்தது. வணிக நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீடுகளிலும் கேமரா பொருத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 500 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கொள்ளை முயற்சி தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இருசக்கர வாகனம் திருட்டு மட்டும் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை. அதே போன்று வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் கடந்த ஆண்டு 24 வழக்குகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 வழக்குகளாக குறைந்து உள்ளது.

கடந்த 2021 முதல் காக்கும் கரங்கள் மூலமாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பகுதியில் சைல்டு லைன், போலீசார் உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் கூட்டு முயற்சியாக 6 ஆயிரத்து 500 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குறைந்து உள்ளது. இதற்கு தொடர் விழிப்புணர்வு முகாம்தான் காரணம். கடந்த ஆண்டு கிடைத்த தகவலின் அடிப்படையில் 34 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்கள் ஈரோடு மாவட்டத்தில் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் காவல் துணை கோட்டங்கள் அதிகரிப்பது குறித்து அரசின் கொள்கை முடிவு. கடந்த சில நாடகளுக்கு முன் கொங்கர்பாளையம் பகுதியில் கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கை, சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், பெண்ணின் உடலில் எவ்வித காயமும் இல்லாதது, அந்த பகுதியில் நடத்தப்பட்ட விசாரணை, தடயவியல் அறிஞர்கள் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பெண் கொலை செய்யப்படவில்லை எனபதையும், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

யாருக்காவது இதில் சந்தேகம் இருந்தால் அது குறித்து உரிய விளக்கம் அளிக்க தயார். இதை தவிர எந்த வழக்காக இருந்தாலும் வதந்திகளை பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையில் திருப்தி இல்லை என்றால் எங்களிடம் உறவினர்கள் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணம், விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைப்பவர்கள் உரிய பாதுகாப்போடு வைக்க வேண்டும். வெளியூர் செல்பவர்கள் உள்புறமாக பூட்டி செல்ல வேண்டும். இந்த ஆண்டு சாலை பாதுகாப்பிற்கு ரூ. ஒரு கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் அதிநவீன 250 கேமரா மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் மட்டுமே தமிழக அளவில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இந்த அளவு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க விடுமுறை நாட்களில் ஒரு தீயணைப்பு வாகனமும், தீயணைப்பு வீரர்களும் கொடிவேரி அணையிலேயே தயார் நிலையில் வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கோபி டி.எஸ்.பி. சியமளா தேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி கொள்ளை: கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: