தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7,700ல் இருந்து ரூ.14,000-மாக உயர்வு: முதல்வர் உத்தரவு

சென்னை: தற்காலிக அரசு செவிலியர்களுக்கு 7,700 ரூபாயில் இருந்து ரூ.14 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி மருத்துவமனைகளில் 7,700 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிரந்தர செவிலியர் பணியிடம் காலியாகும் போது, தற்காலிக செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதுவரை 7,700 ரூபாய் என்ற தொகுப்பு ஊதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களின் ஊதியத்தை ரூ.14,000-மாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊதிய உயர்வானது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 ரூபாய் வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் 12,000 செவிலியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: