மூல நட்சத்திரமும் சரஸ்வதியும்…

நட்சத்திரங்களிலேயே மூலம் மிகச் சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. சில பண்டைய நூல்கள் மூல நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக குறிப்பிட்டுள்ளன.  ‘ஆதிமூலம்’ (‘நட்சத்திரங்களுக்கெல்லாம் – ஆதி மூலம்’) என்ற சொல் கூட அந்த நூல்கள் கூறும் விஷயத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.கல்விக்கரசியான சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரமும் மூலம்தான். ஆனால், இந்த நட்சத்திரம் பெண்களைப் பொறுத்தவரை மோசமானது என்ற கருத்து இருக்கிறது. ஆனால், அந்த நட்சத்திரத்தை தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம், மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறாள்.  அதேபோல் நவமி திதியையும் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர். அந்தத் திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள். இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள். சரஸ்வதிக்கு மட்டுமல்லாமல், சமயோஜித அறிவு, தைர்யம், பலம், போன்ற எல்லாவற்றிலும் சிறந்த ஆஞ்சநேயரும் மூல நட்சத்திரத்தையே தன் ஜென்ம நட்சத்திரமாக்கிக் கொண்டார்.மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. ஞானத்தை அருள்பவர் இவர். கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று உணர்த்துகிறார் இவர். நிறைய துறவிகளும், கல்வியாளர்களும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளனர். எனவே, மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துகொள்பவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் எல்லா வகையிலுமே சௌபாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலத்தில் நான்காம் பாதத்தில் (பின்பகுதி மூலம்) பிறப்பவர்கள் பிரச்னைகளை சமாளிக்கும் மனத்திண்மை பெற்றவர்களாகவும் இருந்து, எதிரிகளை வெல்லும் (நிர்மூலம் செய்யும்) தைரியம் உள்ளவர்களாகவும் இருப்பர் என்பதே இதன் கருத்து. மேலும் ஜாதகத்தில் எல்லா கிரகங்களின் நிலையை வைத்துதான் ஜாதகருக்கு பலனே தவிர, அதில் ஒரு பகுதியான நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு மட்டும் பலன் சொல்வது சரியாக  இருக்காது. எனவே, புகுந்த வீட்டில் உள்ள கணவரின் ரத்த உறவுகளை பாதிக்கும் நட்சத்திரம் மூலம் அல்ல. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ மூலம் நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில். சென்னை கோயம்பேட்டில் இருந்து (45 கி.மீ). தக்கோலம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.மூலநட்சத்திர தினத்தில் பிறந்த கலைமகள் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயரது நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தார். ஆஞ்சநேயரும் முதன் முதலில் மூல நட்சத்திரத்தன்று மப்பேடு தல இறைவனை சிங்கநாத இசைகொண்டு வழிபட்டு சிவனருள் பெற்றார். இதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் இசைக்கலைஞர்களை கூட்டி பிரார்த்தனை செய்தால் ஆய கலைகள் 64லிலும் தேர்ச்சி பெறுவார்கள் என்பது ஐதீகம்.தொகுப்பு: ஹரிணி

The post மூல நட்சத்திரமும் சரஸ்வதியும்… appeared first on Dinakaran.

Related Stories: