முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு நெல் பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?வேளாண் அதிகாரி ஆலோசனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டு சம்பா தாளடி பருவத்தில் சுமார் 13500 எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை ஓய்ந்து பனிப்பொழிவு காணப்படுவதால் குளிரான தட்பவெப்ப சூழ்நிலை நிலவி வருகிறது இந்த சூழ்நிலையில் நெல் பயிரில் புகையான் என்று சொல்லக்கூடிய பழுப்பு தத்துப்பூச்சியின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த புகையான் தாக்குதல் குறித்து முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் பார்த்தசாரதி கூறுகையில், இந்த பழுப்பு தத்துப்பூச்சி அல்லது இளம் குஞ்சு பெறுவதிலும் முதிர்ச்சி அடைந்த பூச்சி நிலையிலும் நெல் பயிரில் சாறுகளை உறிஞ்சுவதால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும். இந்தப் பயிர்களின் மேல் வௌ்ளை நிறத்தில் பூஞ்சானம் போன்ற பரவல் காணப்படுகிறது. புகையான் தாக்கிய வயல்களில் இருந்து பெறப்படுகின்ற நெல் பதராக மாறி மேல்பரப்பில் பூஞ்சை போன்ற வௌ்ளை நிறத்திலான வளர்ச்சி காணப்பட்டு பயன்படாமல் போகிறது.இந்தப் புகையான் பூச்சியானது சிறிய பரப்பில் தென்பட்டாலும் மிக மிகக் குறுகிய காலத்தில் முழுப்பரப்பினையும் தாக்கி எரிந்துபோன பயிர்கள் போல எதற்கும் பயனில்லாமல் மாற்றி விடுகிறது. எனவே புகையான் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். புகையான் பூச்சியானது நீர்நிலைகள் மேல்பரப்பில் குளிர்ச்சியான நிலையில் வாழக்கூடியது.எனவே வயல்களில் புகையான் பூச்சிகள் தென்பட்ட உடனேயே வயல்களில் உள்ள நீரினை வடித்துவிட வேண்டும். நெல் பயிருக்கு அதிக அளவில் யூரியா வடிவில் தழைச்சத்தை விடாமல் தேவைப்படும் அளவு தழை சத்துக்களை பிரித்து இடவேண்டும். நெல் பயிர்களை நடவு செய்யும்போது நெருக்கி நடவு செய்யாமலும் இரண்டரை அல்லது மூன்று மீட்டர் பாத்திக்கு அரையடி இடைவெளி விட்டு பட்டம் போட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு குத்துக்கு ஒரு புகையான் பூச்சி என்ற பொருளாதார சேத நிலைக்கு அதிகமாக காணப்படும் நிலையில் காணப்படும் போது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவது மிக அவசியம். அவ்வாறு ரசாயன பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு முன் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரினை வடித்து காற்று மற்றும் சூரிய வெளிச்சம் படும்படி வயல்களில் நெல் பயிர்களில் விளக்கம் போடவேண்டும். பைரித்ராய்டுகள், மீத்தைல் பாரத்தியான், பென்த்தியான் மற்றும் குயினால்பாஸ் போன்ற ரசாயன பூச்சிக்கொல்லிளை தெளிக்க கூடாது.இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு பாஸ்போமிடான் 40SL 400 மில்லி அல்லது மானோகுரோட்டோபாஸ் 36SL 500 மில்லி அல்லது பாசலோன் 35EC 600 மில்லி அல்லது கார;பரில் 10 சத தூள் 10 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 20EC 500 மில்லி அல்லது டைக்குளோர்வாஸ் 76WSC 100 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.விவசாயிகள் தங்கள் நிலங்களில் புகையான் தாக்குதல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கட்டுப்படுத்தவும். இது குறித்து மேலும் விபரங்கள் பெற தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு நெல் பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?வேளாண் அதிகாரி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: