முத்துப்பேட்டை, மே 26: முத்துப்பேட்டையில் பழுதான நிழற்குடையில் பசி, பட்டினியால் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி தவித்து வருகிறார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை கடைதெருவில் சுமார் 15 ஆண்டுக்கு மேலாக ஒரு மூதாட்டி ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து வந்தார். இந்த மூதாட்டி கடைதெருவில் மக்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு சாலையோரத்தில் உறங்கி வந்தார். இந்நிலையில் பழைய பேருந்தில் உள்ள பஸ் பயணிகள் நிழற்குடை தங்கி இருந்தார். அப்போது கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் வீசியபோது காற்றின் வேகத்திற்கு நிழற்குடை சேதமாகி இடிந்தது. இதில் இந்த மூதாட்டி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.பின்னர் அந்த நிழற்குடை மக்கள் பயன்படுத்த முடியாமல் போனதால் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள பேரூராட்சியின் பழைய குப்பை கிடங்கு அருகில் உள்ள ஆலங்காடு வல்லம்பகாடு பஸ் பயணிகள் கட்டிடத்தில் மூதாட்டி தஞ்சம் புகுந்தார். அன்று முதல் இன்று வரை அங்கேயே தங்கி காலத்தை கடத்தி வருகிறார். முன்பு பழைய பஸ் நிலையால் தங்கிய போது சாப்பாட்டுக்கு பஞ்சமில்லாமல் சாப்பிட்டு வந்த இந்த மூதாட்டிக்கு தற்போது ஒரு வேலை சாப்பாடு கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. இதனால் மூதாட்டி பசி பட்டினியால் பரிதவிக்கும் நிலைமையில் உள்ளார்.
மேலும் மூதாட்டி அவரின் வேலைகளை பார்த்து கொள்ளும் வகையில் தற்போதைய நிலை இருந்தாலும், தனது உடலை குழித்து பராமரிக்கவும் இயற்கை உபாதைகள் கழிக்கவும் வழியில்லாமல் இருப்பதால் அதே பகுதியில் இயற்கை உபாதைகளை கழித்து அசுத்தமாக வாழ்ந்து வருகிறார். மேலும் அழுக்கான உடைகள் அசுத்தமான உடமைகள் அங்கு குவித்து வைத்துள்ளதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவி வருகிறது. எனவே மூதாட்டியின் நலன் கருதி அவரை அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post முத்துப்பேட்டையில் சேதமடைந்த நிழற்குடையில் பசி, பட்டினியால் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் மூதாட்டி appeared first on Dinakaran.