முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டது: அமைச்சர் நாசர் பேச்சு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தொற்று விழிப்புணர்வு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முதல்வரால் கொரோனா 2வது அலை அசுர வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார். திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பழங்குடியினர் சாதிச்சான்று மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் எம். சத்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.  இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு பழங்குடியினர் 104 பேருக்கு சாதி சான்றிதழ், 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா, 7 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பேசும்போது, ‘‘பழங்குடியின மக்களுக்கு விரைந்து அவர்களுக்கு தேவையான சாதிச்சான்று, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர உடனுக்குடன் வழங்க தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா 2வது அலையை அசுர வேகத்தில் ஈடுபட்டு முதல்வரின் தீவிரமான நடவடிக்கையால் விரைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேப்போல்,  3வது அலை தொடக்கத்திலே கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே, மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.  இந்தியாவிலேயே முதல் முதல்வராக நமது தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் பலராலும் பாராட்டப்படுகிறார்.’’ என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி சந்திரன், திருவள்ளூர் விஜி ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி நகர பொறுப்பாளர் வினோத் குமார், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ஜவகர்லால், ஒன்றிய செயலாளர் கூலூர் எம்.ராஜேந்திரன், மகாலிங்கம், சி. ஜே சீனிவாசன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சரும் மாவட்ட கலெக்டரும் அதிகாரிகளும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை திருத்தணி நகரத்தில் நடத்தினர். மேலும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பள்ளிப்பட்டு வட்டார மருத்துவர் தனஞ்ஜெயன் நன்றி கூறினார்….

The post முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டது: அமைச்சர் நாசர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: