மிரட்டும் தொற்று பரவல்!: காப்பீட்டு திட்டங்களில் சேர 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம்..உரிமை கோரல்களை குறைக்க புது வியூகம்..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஓராண்டிற்கும் மேலாக காப்பீட்டு நிறுவனங்களில் குறிப்பாக சுகாதார காப்பீட்டு நிறுவனங்களில் கொரோனா பாதிப்பு  பாலிசி கிளைம் எனப்படும் காப்பீட்டு உரிமை கோரல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை குறைக்கும் வகையில் புதிதாக மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் வழங்கி வருகின்றன. 
டாடா ஏ.ஐ.ஏ. காப்பீட்டு நிறுவனம் டேர்ம்ஸ் இன்சூரன்ஸ் எனப்படும் காலமுறை காப்பீட்டு திட்டத்தில் இணைய 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்கியிருக்கிறது. தடுப்பூசி போட்டுகொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் 5 விழுக்காடு வரை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தள்ளுபடி அளித்திருக்கிறது. கொரோனா தொடர்பான காப்பீட்டு உரிமை கோரல்கள் 2020ம் ஆண்டு மிக அதிக அளவில் இருந்ததாக ஐ.சி.ஐ.சி.ஐ. தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 2,620 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  
இந்நிலையில், பாலிசி கிளைம் எனப்படும் உரிமை கோரல்கள், கொரோனா முதல் அலையை விட, 2ம் அலையில் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 2 தவணை தடுப்பூசி உடல் பாதிப்புகளை தடுக்கும் என்பதால் காப்பீட்டு உரிமை கோரல்கள் குறைந்து நிறுவனங்களின் நிதி ஆதாரமும் பாதுகாக்கப்படும். இந்த வியூகத்தின் அடிப்படையிலேயே மருத்துவ காப்பீட்டில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 2 தவணை தடுப்பூசியை காப்பீட்டு நிறுவனங்கள் கட்டாயமாக்கி வருகின்றன. 

The post மிரட்டும் தொற்று பரவல்!: காப்பீட்டு திட்டங்களில் சேர 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம்..உரிமை கோரல்களை குறைக்க புது வியூகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: