மழை, வெள்ளத்தால் குளத்தூர் பகுதியில் 28 வீடுகள் சேதம்

 

குளத்தூர்,டிச.24: குளத்தூர் பகுதியில் கனமழை, வெள்ளத்தால் 28 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெரு வீதிகளில் ஓடிய காட்டாற்று வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மண் வீடுகள் என மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் வீடுகளை இழந்த பொதுமக்கள் இருப்பிட வசதியின்றி தவித்து வருகின்றனர். இதில் குளத்தூர் பகுதியில் 28 பேர் வீடுகள் இடிந்து குடியிருக்க வழியின்றி தவித்து வருகின்றனர்.

வீடுகளை இழந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பல வருடங்களாக கூலி தொழில் செய்து குடிசை மற்றும் மண் வீடுகளில் குடியிருந்து வருகிறோம். மழை பெய்தால் அங்காங்கே ஒழுகும் ஓட்டைகளை அடைப்பதற்கு கூட வழியில்லாமல் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதே போதும் என ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பெய்த கனமழை எங்களது வாழ்வாதாரத்தை பாதித்தது மட்டுமில்லாமல் குடியிருக்க கூட குடிசை இல்லாமல் வெள்ளம் அடித்து சென்று விட்டது. இடிந்த வீடுகளுக்கு தமிழக அரசு சார்பில் ₹10ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. மேலும் அறிவித்துள்ள நிவாரணத்தொகையை விரைவாக வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும்’ என்றனர்.

The post மழை, வெள்ளத்தால் குளத்தூர் பகுதியில் 28 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: