மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்பு 923 பேருக்கு கருணை தொகை ரூ.2.21 கோடி வழங்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சுபேதார் கார்டன்  திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில்  வசிக்கும் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.61.44 லட்சத்திற்கான  காசோலைகளை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் 1974ம் ஆண்டு 256 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வாரிய பராமரிப்பில் இருந்து வந்தது. நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது உங்களின் வாக்குகளை கேட்டு எங்கள் வேட்பாளர்கள் வரும்பொழுது எங்களுக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தீர்கள். அதனை ஏற்று புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என உங்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள். அதனை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கின்றது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் அரசு இது. இத்திட்டப்பகுதி கட்டப்பட்டு 48 வருடங்களாகின்றது அதன் உறுதிதன்மை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்குழு 256 குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைத்தது. அதனடிப்படையில் ஒரு வீடு 415 சதுர அடி பரப்பளவில் 300 வீடுகள் ரூ.40.13 கோடி மதிப்பீட்டில், நல்லத்தரத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 15 மாதங்களில் கட்டித் தரப்படும்.  இக்குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக கடந்த கால ஆட்சியில் ரூ.8,000 வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகையை முதலமைச்சர் உயர்த்தி ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம் 256 குடும்பங்களுக்கு தலா ரூ.24,000 வீதம் ரூ.61.44 லட்சம் காசோலையாக வழங்கப்பட உள்ளது. இவ்வாரியத்தால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள் நீண்ட நாள் பயன்பாடு மற்றும் தட்பவெப்ப சூழ்நிலையின் காரணமாக சிதிலமடைந்துள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவரது ஆலோசனையின்படி, அண்ணா பல்கலைகழக தொழில்நுட்ப வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, சென்னையில் 20 ஆண்டுகள் கடந்த அனைத்து திட்டப்பகுதிகளின் குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை பெறப்பட்டது. இத்தொழில்நுட்பக் குழு 96 திட்டப்பகுதிகளிலுள்ள 30,517 பழைய குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய பரிந்துரை செய்தது.    சென்னையில் இதுவரை குயில்தோட்டம் மற்றும் திருவொற்றியூர் திட்டப்பகுதிகளில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 667 குடியிருப்புதாரர்களுக்கும், இன்று சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் வழங்கப்படவுள்ள 256 குடியிருப்புதாரர்களையும் சேர்த்து மொத்தம் 923 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.2.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. சாலைகள், வடிகால்கள், குடிநீர் திட்டப்பணிகள், போன்றவற்றிற்கு ஏற்படும்  செலவீனத்தை  குடியிருப்புதாரர்கள் மீது சுமத்த கூடாது இதனை அரசே ஏற்க வேண்டும் முதலமைச்சர் உத்தரவிட்டதின் அடிப்படையில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை தற்போது குறைப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் எலிசபெத் அகஸ்டின், வாரிய தலைமை பொறியாளர் ராம சேதுபதி, நிர்வாகப் பொறியாளர் தா.முருகேசன், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு.ஜே.அ.நிர்மல் ராஜ், வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் வழங்கப்படவுள்ள 256 குடியிருப்புதாரர்களையும் சேர்த்து மொத்தம் 923 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.2.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. …

The post மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்பு 923 பேருக்கு கருணை தொகை ரூ.2.21 கோடி வழங்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: