இந்நிலையில், சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் மாநில அரசுக்கு முதல் தவணையாக இந்த மானியம் வழங்கப்படுகிறது. சிறு நீர்நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சில உபரி வாய்க்கால்களை மேம்படுத்துதல், புதிய மழைநீர் வடிகால்களை நிர்மாணித்தல், கடற்பாசி பூங்காக்கள் மேம்பாடு, நீர்நிலைகளை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு இந்த நிதி மானியமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்குள் சில புதிய பணிகள் தொடங்கி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு.வி.க.நகர், கொளத்தூர், கெருகம்பாக்கம் வாய்க்காலில் வெள்ளத்தை குறைக்கும் வகையில் தணிகாசலம் வடிகால் கொள்ளளவு மேம்படுத்தப்படுகிறது. மணப்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கை குறைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கொரட்டூர் உபரி வாய்க்காலின் திறனை அதிகரிக்கவும், புத்தகரம் உள்ளிட்ட சிறு நீர்நிலைகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணலி, சாத்தங்காடு, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள 8 நீர்நிலைகளும் வெள்ளத்தை தணிக்க புதுப்பிக்கப்படும். நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம், நகர நீர்த்தேக்கங்களின் அடைப்புகளை தானியங்கி முறையில் இயக்குவதற்கான எஸ்சிஏடிஏ (SCADA – மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல்) நிறுவுவதாகும்.
இந்த மென்பொருள் பயன்பாடு நகர நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வரத்து, சேமிப்பு மற்றும் நீர் மட்டம் உள்ளிட்ட நிகழ்நேர தரவுகளை வழங்க உதவும். 32 கோடி மதிப்பிலான இந்த திட்டம், திட்டமிட்டபடி உபரி நீரை வெளியிடுவதன் மூலமும், வெள்ளத்தை தவிர்ப்பதன் மூலமும், நீர்நிலைகளில் சேமிப்பை மேம்படுத்துவதன் மூலமும் சிறந்த நீர்த்தேக்க நிர்வாகத்தை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
வடிகால் பணிகளை மேயர் ஆய்வு: சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், வார்டு-178க்கு உட்பட்ட சி.எஸ்.ஐ.ஆர் சாலை மற்றும் கானகம் பெரியார் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பாரதியார் தெரு, சென்னை மேல்நிலைப்பள்ளி, பெருமாள் கோயில் தெரு, சென்னை தொடக்கப் பள்ளி மற்றும் உதயம் நகர், சென்னை தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டிட பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதேபோல், வார்டு-176க்கு உட்பட்ட ராம்நகர், 6வது பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் பணி, சீனிவாச நகர் வீராங்கல் ஓடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுக்கு மதகு அமைக்கும் பணி, கல்கி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவமழைக்கு முன்னதாக பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, இணை ஆணையர் (கல்வி) விஜயா ராணி, தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், தலைமைப் பொறியாளர் (பொது) ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தம், பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு முதல் தவணையாக ரூ.150 கோடி: ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.