சென்னையில், பெரம்பூர் ரயில் நிலைம் அருகே மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திடீரென ரயில் மறியல் செய்ய சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோன்று, விவசாயம், தொழிற்துறையை பாதிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்து இருப்பதாகவும், தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு பட்ஜெட்டில் வஞ்சித்திருப்பதாகவும் குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் இயக்கத்தினர் மறியல் போராட்டம் சென்னை சாஸ்திரி பவன் முன்பு நடந்தது.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தலைமையில் கிண்டி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் ஏற்பட்டுள்ள தேசிய பேரிடர் போன்று ஒரு பேரிடர் இந்தியாவில் ஏற்பட்டிருக்காது.
தமிழ்நாடு முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சரை அனுப்பி ரூ.5 கோடி நிதி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளை மீட்பு குழுவினரை அனுபியுள்ளார். இதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் விளம்பரத்திற்காக இவ்வாறு பேசி அவர் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக அமித்ஷா பேசுகிறார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.