மது வாங்கி கொடுக்காததால் மோதல் கொத்தனார், நண்பரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ரவுடி அகஸ்தீஸ்வரம் அருகே பரபரப்பு

நாகர்கோவில், மே 25: அகஸ்தீஸ்வரம் அருகே மது பாரில் ஏற்பட்ட முன் விரோதத்தில் கொத்தனார், நண்பரை தாக்கிய ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள். அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்று பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(29). கொத்தனார். கடந்த 22ம்தேதி சதீஷ் மற்றும் அவரது நண்பர்களான அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆனந்த பாலாஜி, சரவணன் மற்றும் சிலர் சேர்ந்து கன்னியாகுமரி சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ரகுபாலன் (26) என்பவர் அங்கு வந்து, ஆனந்த பாலாஜியிடம் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் அவரை ரகுபாலன் ஆபாசமாக பேசி தாக்க முயன்றார். இதை சதீஷ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தடுத்து, ரகுபாலனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அகஸ்தீஸ்வரம் சாஸ்தான்கோவில் அருகில் சதீஷ், ஆனந்த பாலாஜி மற்றும் மணி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ரகுபாலன் உருட்டு கட்டையால் சதீஷ் மற்றும் ஆனந்த பாலாஜியை சரமாரியாக தாக்கினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும், சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. குற்றாலிங்கம் வழக்கு பதிவு செய்து, ரகுபாலனை தேடி வருகிறார். ரகுபாலன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

The post மது வாங்கி கொடுக்காததால் மோதல் கொத்தனார், நண்பரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ரவுடி அகஸ்தீஸ்வரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: