மதுரையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

 

மதுரை, நவ. 22: வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய புகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, சுப்ரமணியபுரம், நல்லமுத்துப்பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் (30). கூலி தொழிலாளி. இவரது, மச்சினன் பாலாஜி என்பவருக்கும், கீரைத்துறையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த, 11ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலாஜியை, அந்த சிறுவன் தாக்கியுள்ளார். 14ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், சிறுவனை திருப்பி பாலாஜி தாக்கியுள்ளார்.

அதை பார்த்த அய்யனார், இருவரையும் அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய சிறுவன், பாலாஜிக்கும், அய்யனாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த, 19ம் தேதி அய்யனாரின் வீட்டிற்கு சென்ற சிறுவன், அவனது உறவினரான சுந்தரேஸ்வரன் (71), ஊமச்சிகுளத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், மலைச்சாமி, சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து, அய்யனாரை ரோட்டில் வைத்து வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அய்யனார், தனது மைத்துனரான பாலச்சந்தர் உதவியுடன் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின்பேரில் வழக்கு பதிந்து அய்யனாரை தாக்கிய இரண்டு சிறுவர்களையும், சுந்தரேஸ்வரன், 19 வயது இளைஞர் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மலைச்சாமி மற்றும் சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்களில் கைதான இரண்டு சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மதுரையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: