மண், நீர் பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு ஆலோசனை

 

சிவகங்கை, ஜன.1: மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து அதன்படி விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மண் மற்றும் நீர் பரிசோதனை செய்து அதன்படி விவசாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்ணிலுள்ள 16வகையான சத்துகள் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் முதன்மையான கரிமச்சத்திற்கு தொழு உரம் இடலாம். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் முதல்நிலை சத்துகளாகும்.

இவைகள் முறையே யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், மூரேட் ஆப் பொட்டாஸ் ஆகிய உரங்கள் இடுவதால் இவைகளின் பற்றாக்குறை சரி செய்யப்படுகிறது. இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் ஆகியவை பேரூட்டச் சத்துக்களாகும். நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, ஜிங்க், மாங்கனீசு, காப்பர், போரான், குளோரின், மாலிப்டினம் ஆகியன மிகவும் குறைவான அளவுகளில் தேவைப்படுபவை. கலப்பு உரங்கள், ஜிப்சம் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இடுவதன் மூலம் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாட்டினை சரி செய்யலாம்.

மண்ணிலுள்ள சத்துக்களின் நிலையை அறிந்து கொண்டு பயிருக்கு தேவைப்படும் உரமிடுவது மிகவும் அவசியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் அதிகளவு உரம் பயன்படுத்தப்படுவதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு வழிவகுப்பதோடு பயிர் எடுத்துக்கொள்ளும் உரம் போக மீதமுள்ளவை மண்ணின் வளத்தை பாதிக்கிறது. எந்தப் பயிர் சாகுபடி செய்வதாலும் அந்த வயலில் மண் மாதிரி எடுத்து அதனை ஆய்வகத்தில் பரிசோதித்து குறைபாடுள்ள சத்துக்களுக்கான உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடுவதால் நல்ல பயிர் விளைச்சல் பெறலாம்.

நெல், சிறுதானியம், பயறு வகைகள், நிலக்கடலை, தென்னை, கரும்பு மற்றும் பருத்தி என தனித்தனி பயிருக்கு நுண்ணூட்ட சத்துக்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும். சிவகங்கையில் தொண்டி சாலையில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகத்தில் மண் மற்றும் பாசன நீர் மாதிரியை கொடுத்து ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதன்படி விவசாயம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மண், நீர் பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: