நியூசிலாந்து: இன்று தொடங்கிய மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்தில் இன்று முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றது. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும் எனவும், ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் தொடங்கியுள்ள மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதியது. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அசத்தினார். நியூசிலாந்து அணி இலக்கை விரட்டுவதற்குக் கடும் சவாலாக மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அமீலியா கெர்ரை 13 ரன்களில் வீழ்த்தியது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கேப்டன் சோபின் டிவைன் சதமடித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். எனினும் 45-வது ஓவரில் 108 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றி பெற 6 ரன்களே தேவைப்பட்ட நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. 49-வது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால் நியூசிலாந்தின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி ஓவரில் டாட்டின் சிறப்பான பந்து வீச்சால் கேட்டி மார்டினை 44 ரன்களிலும் ஜெஸ் கெர்ரை 25 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு கடைசி பேட்டர், ரன்அவுட் ஆனார். இதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியால் 2 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது. இறுதியில் 49.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பரபரப்பான முறையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஹேலி மேத்யூஸ் தேர்வானார்….
The post மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இ. தீவுகள் அணி வெற்றி!!! appeared first on Dinakaran.