போலீஸ் வாகனம் முன் மறியலுக்கு தூண்டிய திமுக பிரதிநிதியை தாக்கிய வழக்கில் அதிமுக வேட்பாளர் கைது: நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்கிறது

சேலம்: சேலத்தில் திமுக பிரதிநிதியை தாக்கிய வழக்கில் அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், மக்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சேலம் அன்னதானப்பட்டி இரட்டை கிணறு என்ற பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திமுக பிரதிநிதி சின்னையன் (64), சாக்கடை அள்ளும் பணியை செய்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? எனவும் அவர் கேட்டுள்ளார். அந்நேரத்தில் அங்கு 58வது வார்டு அதிமுக வேட்பாளர் பாண்டியன் நிர்வாகிகளுடன் வந்து, ‘என் பகுதியில் நீ வந்து ஏன் சாக்கடையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறாய்’ என்று சின்னையனிடம் கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வேட்பாளர் பாண்டியன், சின்னையனை தாக்கியுள்ளார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின்பேரில் அதிமுக வேட்பாளர் பாண்டியன் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் நேற்று கமிஷனர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளர் பாண்டியனை கோர்ட்டிற்கு அழைத்து செல்ல விடாமல் போலீஸ் வாகனத்தின் முன் படுத்தும், மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட வேட்பாளர் பாண்டியனை, சேலம் 1வது நீதித்துறை நடுவர் பொன்பாண்டி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பாண்டியன் கூறினார். இதையடுத்து வரும் 1ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர், அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேட்பாளர் பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவரது உடல்நிலையை பரிசோதித்த பிறகு எந்த பிரச்னையும் இல்லாத பட்சத்தில் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையில் நேற்று போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் வேறு வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்து கொண்டிருந்த பெண்களை,  அப்படியே மறியலுக்கு அதிமுக நிர்வாகிகள் சரக்கு வண்டியில் அழைத்து வந்து இறக்கியுள்ளனர். அவர்கள் ஓட்டு சேகரிக்க ₹200 கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வயதான முதியவரை அடித்து தள்ளிய புகாரின் அடிப்படையில் வேட்பாளர் பாண்டியன் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்பாவி பொதுமக்களை அழைத்து வந்து போலீஸ் வாகனத்தை மறிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்வது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். வீடியோவில் பதிவாகியுள்ளவர்களை, நிர்வாகிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

The post போலீஸ் வாகனம் முன் மறியலுக்கு தூண்டிய திமுக பிரதிநிதியை தாக்கிய வழக்கில் அதிமுக வேட்பாளர் கைது: நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: