ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன் (40). இவரது மனைவி சுபா (33). இருவரும் ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கீழஅம்பிகாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவரை அணுகி, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய செந்தில்குமார், பல தவணைகளில் ரூ.85 லட்சத்தை வெங்கடேசன் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதில் செந்தில்குமாருக்கு ரூ.26 லட்சத்து 82 ஆயிரத்தை மட்டும் வெங்கடேசன் கொடுத்தார். மீதமுள்ள தொகை மற்றும் லாப தொகையை கொடுக்கவில்லை. இதைபோல், வெங்கடேசனிடம் திருச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இவருக்கும், ரூ.19,50,500ஐ மட்டுமே வெங்கடேசன் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள தொகை மற்றும் லாப தொகையை கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் செந்தில்குமார், பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக கடந்த மாதம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், திருவெறும்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலரும் வெங்கடேசனிடம் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த வெங்கடேசன், சுபாவை தேடி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெங்கடேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

The post ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது appeared first on Dinakaran.

Related Stories: