புதுக்கோட்டை, ஆக.12: புதுக்கோட்டை அடுத்த பொற்பனைகோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவுக்கு சென்ற பொது மக்களில் பலர் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு கடந்த 44 நாட்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற 875 தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டு வியப்படைந்தனர். தமிழ்நாட்டிலேயே அதிக தொல்லியல் எச்சங்கள் நிறைந்த மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் கருதப்படுகிறது.
புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் பண்டைய கால மனிதர்களின் வாழ்விடம் இருந்ததற்கான கிடைத்த சான்றின் அடிப்படையிலும்,இந்தப் பகுதியில் அமைந்துள்ள சங்க கால கோட்டையை அகழ்வாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் விளைவாகவும் கடந்த 2023 மே மாதம் 20ம் தேதி முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது கடந்த 44 நாட்களாக இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இதுவரை 875 தொன்மையான பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. இந்நிலையில் சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கூறப்படும் புதுக்கோட்டையில் காவல் தெய்வமாக விளங்கும் பொற்பனைக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடி திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நாளில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த கோயிலுக்கு சென்றவர்களில் பலர் கோயிலுக்கு அருகே தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பட்ட தொன்மையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர். மேலும் அகழ்வாராய்ச்சியை பார்வையிட வந்த பொது மக்களுக்கு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியும் அதிலிருந்து கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினர்.
The post பொற்பனைகோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அகழ்வாராய்ச்சி பணிகளை கண்டு வியப்பு appeared first on Dinakaran.