×
Saravana Stores

பொது கணக்குக்குழு 21ம்தேதி சேலம் வருகை

சேலம், நவ.19: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்குக்குழு வரும் 21ம் தேதி சேலம் வருகை தந்து, கள ஆய்வில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது கணக்குக்குழு என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவாகும். இக்குழுவானது ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி வருகிறது.  அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-2024ம் ஆண்டுக்கான பொதுக்கணக்குக் குழு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரும் 21ம் தேதி செவ்வாய்கிழமையன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் குழு உறுப்பினர்கள், துறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மற்றும் மாவட்டத்தில் கள பயணங்கள் மேற்கொள்ள உள்ளனர்.

இக்குழுவானது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியினை ஆக்கப்பூர்வமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. சட்டமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியானது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் பொதுக்கணக்குக் குழு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது கணக்குக் குழு சேலம் வருகையொட்டி அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், அரசு அலுவலர்கள் தங்கள் துறை தொடர்பான முழுமையான விபரங்களை குழுவிற்கு வழங்கிட ஏதுவாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post பொது கணக்குக்குழு 21ம்தேதி சேலம் வருகை appeared first on Dinakaran.

Tags : Public Accounts Committee ,Salem ,Public Accounts Committee of the Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!!