இரண்டாம் சீசனுக்கு தயாராகும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

ஊட்டி: இரண்டாவது சீசன் நெருங்கிய நிலையில், தாவரவியல் பூங்காவில் நடவு பணிக்காக தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் இரண்டாம் சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. கோடை சீசனின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு கலை விழாக்கள் நடத்தப்படுகிறது.

அதே போல் இரண்டாவது சீசனின் போது வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். இச்சமயங்களில் மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி போன்ற எவ்விழாக்களும் நடத்தப்படுவதில்லை. எனினும், இம்முறை இரண்டாம் சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு பணி துவக்கப்பட உள்ளது. தற்போது பூங்காவில் உள்ள பாத்திகள் தயார் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல், தொட்டிகளில் புதிய மண் நிரப்பும் பணிகளை துவக்கியுள்ளனர்.

பாத்திகள் சீரமைக்கப்பட்ட பின், சில நாட்கள் நாற்று நடவு பணிகள் நடக்கும். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இம்முறை மழை பெய்து வருவதால் இரண்டாம் சீசனின் போது அனைத்து செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து அதிகளவு பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இம்முறை இரண்டாவது சீசனுக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளும் மலர் கண்காட்சியை போன்றே ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிக்க முடியும், என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: