கத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?

கேள்வி :   அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

பதில் : திருக்கோவிலூர் K.B  ஹரிபிரசாத் சர்மா

சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.  27  நட்சத்திரங்களில் அக்னி என்ற நெருப்புக் கடவுளை தனது தேவதையாகக் கொண்டிருக்கும் நட்சத்திரம் கார்த்திகை. ‘அக்னிர் ந பாது க்ருத்திகா’ என்று  வேதம் சொல்கிறது. அதனால்தான் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாட்களில் நெருப்பு வடிவில் இறைவனை தரிசனம் செய்கிறோம். அக்னி  ஸ்தலம் ஆகிய திருவண்ணா மலையின் உச்சியில் ஜோதியை ஏற்றுகிறார்கள்.

அக்னியைத் தனது தேவதையாகக் கொண்ட கிருத்திகை நட்சத்திரக் காலில் சூரியன் சஞ்சரிப்பதால்தான் இந்த நாட்களை ‘அக்னி நட்சத்திரம்’ என்ற  பெயரில் அழைக்கிறார்கள். கிருத்திகைக்கு முன்னதாக வருகின்ற பரணி நட்சத்திரத்தின் கடைசி இரண்டு பாதங்கள், கிருத்திகை நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மற்றும் அடுத்தபடியாக வருகின்ற ரோகிணி நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் என சூரியன் சஞ்சரிக்கும் காலத்தினை அக்னி  நட்சத்திர காலமாக வரையறுத்திருக்கிறார்கள். பொதுவாக சித்திரை மாதம் 21ம் தேதி முதல் வைகாசி மாதம் 14ம் தேதி வரை அதாவது மே மாதம்  4ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்த அக்னி நட்சத்திரத்திற்கு உரிய காலம் வரும். அக்னியை தேவதையாகக் கொண்ட கிருத்திகையின் நட்சத்திரக்  கூட்டத்திற்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த காலத்தினை அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

Related Stories: