பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை

 

சென்னை, ஜூலை 8: பெரியபாளையம் அருகே மருத்துவ படிப்பின்றி கிளினிக் வைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை சுகாதாரத்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் ஒருவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வருவதாக, சுகாதார துறைக்கு புகார் சென்றது. அதன்பேரில், சுகாதாரத் துறையினர் கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வந்த குறிப்பிட்ட கிளினிக்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு முதியவர் ஒருவர் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், காரனோடையை சேர்ந்த ரஹீம் (68) எனவும், பிஎஸ்சி பட்டப்படிப்பை பாதியில் கைவிட்ட இவர், பல ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கிளினிக்கிற்கு சீல் வைத்த சுகாதாரத்துறையினர் போலி மருத்துவர் ரஹீமை பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பெரியபாளையம் காவல்துறையினர் ரஹீம் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: