பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மே 11: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வினை எழுதாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் துணை தேர்வினை எழுத இன்று முதல் விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதிட அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று இன்று (11ம் தேதி) முதல் 17ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதில், தனித்தேர்வர்களாக இருந்தால் கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், கடந்த ஆண்டுகளில் பிளஸ் அல்லது பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத அனைவரும் தற்போது நடக்கும் துணை தேர்விலும் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதலாம். தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். துணைத்தேர்வுக்கு 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டத்தில்) விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.185 மற்றும், ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.70 உடன் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.85ம், ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.70 உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கட்டணத்தை சேவை மையத்திலும், பள்ளியிலும் ரொக்கமாக செலுத்தலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000ம் செலுத்திட வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி, தேர்வுக்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். அதில் தேர்வு மையம் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படும் என ஈரோடு அரசு தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிளஸ் 2 துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: