ஓபிஎஸ் பதவி விலகாவிட்டால் அரசே அவரை நீக்க வேண்டும் : கமல்ஹாசன் பேட்டி

சென்னை : எட்டு வழிச்சாலை வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:காவிரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி கூறியதாக தகவல் வந்துள்ளது. நான் கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமியை சந்தித்தது, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் பிச்சை கேட்கவே சென்றேன். அங்குபோய் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் என, இங்கு சிலர் கேட்பார்கள். என் விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதற்காக நான், வெட்கம் பார்க்காமல் பிச்சை கேட்டேன். கர்நாடகவும், நாமும் விரோதிகள் அல்ல. பங்காளிகள். நல்ல காலத்தில் எப்படி ஒன்றாக இணைந்து பூஜை போட்டு கொள்கிறோமோ, அதேபோல் கெட்ட காலத்தில் ஒன்றாக சேர்ந்து, இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போது காவிரி நீருக்காக ஆணையம் அமைக்கப்பட்டது மிகப் பெரிய வெற்றி. அதை தக்க வைத்துக்கொள்வதில், இரு மாநிலங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்கான விசாரணை தொடங்கிவிட்டது. இதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. நானும், அவர் பதவி விலக வேண்டும் என வழிமொழிவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இதை நான், ஓராண்டுக்கு முன்னதாக இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அவர் பதவி விலகவில்லை என்றால், அரசே அவரை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேசிய கமல், ‘‘எதிர்பாராத சூழலால் அரசியலுக்கு வரும் அபாய முடிவை எடுத்திருக்கிறேன். 63 வயதில் இது எனது குறிக்கோள் என சொல்ல முடியாது. தியாகம் என்றும் சொல்ல மாட்டேன். இது எனது கடமை, அடுத்த தலைமுறைக்காக. சினிமாவில் சாதித்துவிட்டேன் என்பது கிடையாது. அது எனது தேவை’’ என்று கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: