தமிழக அரசு மேலாண்மை வரைவு திட்டம் அறிவிப்பு : கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் எதிர்ப்பு

வேளச்சேரி: தமிழக அரசு சார்பில், வெளியிடப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை வரைவு திட்டம் மற்றும் அது தொடர்பாக 27ம் தேதி துறைமுகத்தில் நடைபெற உள்ள மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் மற்றும் ஆல்காட் குப்பம் பஞ்சாயத்தின் சார்பில், கடற்கரையில் பொதுமக்கள் நேற்று கருப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த இரு குப்பத்திலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் துறை இணைய தளத்தில் கடற்கரை மண்டல மேலாண்மை வரைவு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஏப்ரல் 6ம் தேதிக்குள் இணையதளம் வழியாக பொதுமக்கள் கருத்தை தெரிவிக்கலாம். 27ம் தேதி துறைமுகத்தில் நடக்க இருக்கும் கருத்து கேட்பு கூட்டத்திலும், கருத்தை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவு திட்டத்துக்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இந்த வரைவு திட்டத்தில் நில பயன்பாடு, அபாயக்கோடு ஆகியவை பற்றி வரையப்படவில்லை. மீனவ கிராம பொது சொத்துக்கள், மீன கிராமத்தோடு சமூக கட்டமைப்பு, மீனவர்களுக்கு ஏற்ற நீண்ட கால குடியிருப்பு திட்டம் ஆகியவை எதுவும் வரைவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே தமிழக அரசு வரைவு திட்டம் மற்றும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாய தீர்ப்பின் அடிப்படையில் சி.ஆர்.இசட் 2013 விதிமுறையை பின்பற்றி திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே, ஏற்றுக்கொள்வோம். வரும் 27ம் தேதிக்குள் தீர்வை காண வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த சென்னை மீனவ கிராம மக்களை ஒருங்கிணைத்து கடல் வழியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: