புதுச்சேரி, செப். 14: புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரினாவில் தனியார் மூலம் சுற்றுலா படகு இயக்க நேற்று முன்தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், அங்கு விரைந்து சென்று இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சோனாம்பாளையம் சந்திப்பில் நேற்று (13ம் தேதி) காலை சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக மீனவர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்று சோனாம்பாளையம் சந்திப்பில் மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாண்டி மெரினாவிலிருந்து தனியார் சுற்றுலா படகு இயக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் உப்பளம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, தள்ளு முள்ளு ஏற்படும் சூழல் நிலவியது.உடனே போலீசார் லத்தி மற்றும் பாதுகாப்பு கவசத்துடன் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உப்பளம் சாலை, வாணரப்பேட் சாலை மற்றும் புதுவை ரயில்நிலைய சாலையில் போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனாலும் செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் லத்தியுடன் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
The post பாண்டி மெரினாவில் சுற்றுலா படகு இயக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.