நெய்வேலி என்எல்சியில் பதற்றம் போலீசார் மீது பாமகவினர் கல்வீச்சு வாகனங்கள் உடைப்பு-போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு

நெய்வேலி, ஜூலை 29: நெய்வேலி என்எல்சியில் பாமகவினர் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் போலீஸ் வாகனங்கள் உடைக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்களை பாழ்படுத்தி வாய்க்கால் அமைக்கும் பணியை செய்ததை கண்டித்து நேற்று பாமகவினர் நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவுவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கட்சியினர் என்எல்சி ஆர்ச் கேட் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பாமகவினரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பாமகவினருக்கும், போலீசாருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. அப்போது பாமகவை சேர்ந்த ஒருவர் திடீரென போலீஸ் வாகனம் மீது கல்வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். ஆத்திரமடைந்த பாமகவினர் அங்கிருந்த கல், கட்டை உள்ளிட்ட பொருட்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆர்ச் கேட் எதிரில் உள்ள நுழைவுவாயிலில் இருந்த எல்இடி லைட் உள்ளிட்ட பொருட்கள் உடைந்து சேதமானது. இச்சம்பவத்தால் என்எல்சி நுழைவுவாயில் பகுதி போர்க்களமாக மாறியது. நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் 20 காவலர்கள், மூதாட்டி ஒருவர் காயமடைந்தனர். உடனே அவர்களை போலீசார் மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து கலவர பகுதியில் இருந்த அன்புமணி ராமதாஸ் எம்பி, மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, சிவக்குமார் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு, மாநில வன்னியர் சங்க பொதுச் செயலாளர் அரியலூர் வைத்தி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் ஜெகன், செல்வ மகேஷ், சன் முத்துகிருஷ்ணன், கார்த்திகேயன் மற்றும் மாநில நிர்வாகிகள், கட்சியினர் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பாமகவினர் அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் வாகனங்களின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். கலவரக்காரர்களை அப்புறப்படுத்த வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வஜ்ரா வாகனம் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமான நிலைக்கு சென்றதால் போலீசார் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி 5 முறை சுட்டு எச்சரிக்கை செய்ததால் பாமகவினர் நாளாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் நெய்வேலி நுழைவு வாயில் இந்திரா நகர் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர்- நெய்வேலிக்கு இடையே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று அழைத்து சென்றனர். இதற்கிடையே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன், விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் மூன்று மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெய்வேலி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி தெர்மல், டவுன்ஷிப், ஊ.மங்கலம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள 26 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. நெய்வேலி மற்றும் இந்திரா நகர், வடக்குத்து உள்ளிட்ட பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 250 பேரை போலீசார் மாலையில் விடுவித்தனர்.

The post நெய்வேலி என்எல்சியில் பதற்றம் போலீசார் மீது பாமகவினர் கல்வீச்சு வாகனங்கள் உடைப்பு-போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: