நீர்நிலைகளில் கழிவை கலப்பது தாய்பாலில் விஷம் கலப்பது போன்றது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: நீர்நிலைகளில் கழிவை கலப்பது தாய்பாலில் விஷம் கலப்பது போன்றது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான 2 நாள் ஆய்வு கருத்தரங்கம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மாநில சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களுக்கான மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அஸ்வின்குமார் சவுபே மத்திய அரசு செயலர் லீனா நந்தன், கூடுதல் செயலர் நரேஷ்பால் கங்வார் ஆகியோர் காற்றின் அவசியம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும் பேசினர். இந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசும்போது, ‘எனக்கு திருக்குறள் புத்தகத்தை அமைச்சர் வழங்கினார். சிலவற்றை படித்தேன் காலத்திற்கேற்ற புத்தகம். திருக்குறள் வாழ்வியலுக்கான புத்தகம். இன்று நாளை மட்டும் இல்லாமல் இதனை நாம் எப்போது பின்பற்ற வேண்டும். தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே நமது குறிக்கோளை அடையமுடியும். இந்த புத்தகத்தை வழங்கிய அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றி, சுற்றுசூழலை பாதுகாக்க காற்றின் தரத்தை உயர்த்த வேண்டும். இதனை உயர்த்த அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.அமைச்சர் மெய்ய நாதன்பேசும்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்க 14 வகையான பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. 174 வகை பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்கை பார்த்தாலே நமக்கு கோபம் வரவேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம்கூட விதித்திருக்கிறோம். அதனை அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். நீர்நிலைகளில் கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. யாரேனும் இதனை செய்துவந்தால் அதனை உடனடியாக நிறுத்தவேண்டும். என்றார். சென்னையில் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் சைக்கிள் மற்றும் நடந்து மட்டுமே செல்லும் 6 பள்ளிகளுக்கு ‘இ-கம்யூட் ஸ்கூல்’ என்ற சான்றிதழ்களை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வழங்கி கவுரவித்தார்….

The post நீர்நிலைகளில் கழிவை கலப்பது தாய்பாலில் விஷம் கலப்பது போன்றது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: