நாளை முதல் நெல் கொள்முதலில் இனி புதிய முறை; விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்படும் : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : நாளை முதல் நெல் கொள்முதல் செய்வதற்கு முன்பாக விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.விவசாயிகளின் நலனுக்காகவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய அவர், விவசாயிகள் சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்கிறார்களா ? அல்லது குத்தகைக்கு எடுக்கிறார்களா ? என்பதை அறிந்து கொள்ள இந்த புதிய திட்டம் உதவும் எனக் கூறினார்.சொந்த நிலமாக இருந்தாலும் சரி, குத்தகை நிலமாக இருந்தாலும் கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி அளித்த சுதன்ஷு பாண்டே, எவ்வளவு நெல் விளைவிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும் நில ஆவணங்களை டிஜிட்டல்படுத்தவும் மத்திய அரசின் திட்டம் உதவும் எனக் கூறினார். முழுக்க முழுக்க விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவே நில ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், வர்த்தகர்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை மத்திய அரசு ஆதரிக்காது எனக் கூறினார். ஆவணங்களை சரிபார்க்கும் இந்த முறை அமலுக்கு வந்தால், குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்கும் என்று தெரிவித்த சுதன்ஷு பாண்டே, வர்த்தகர்களை அடையாள காண முடியும் என்று கூறினார். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கப்பட்டு வருவதால், அதன் பலன்கள் உண்மையான விவசாயிகளை சென்று அடைவதற்காகவே இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து இருப்பதாக தெரிவித்த வேளாண்துறை செயலர் சஞ்சய் அகர்வால், அரசின் முயற்சிக்கு விவசாயிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்….

The post நாளை முதல் நெல் கொள்முதலில் இனி புதிய முறை; விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்படும் : ஒன்றிய அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: